வேளாண்மை இயந்திரமயமாக்கும் திட்டத்தில், விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் வேளாண் கருவிகள் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் தெரிவித்துள்ளதாவது : வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில், விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்குதல், மானியத்தில் வாடகைக்கு வழங்கும் மையங்கள் அமைத்தல் ஆகிய பணிகள் ரூ.9.37 கோடி செலவில் செயல்படுத்தப்பட உள்ளன.
அதன்படி, நடப்பு ஆண்டில் (2019-20) 239 டிராக்டர்கள், 10 பவர்டில்லர்கள், 2 வைக்கோல் கட்டு கட்டும் கருவி, 1 விசைக் களையெடுப்பான், 3 பல்வகைப் பயிர் கதிரடிக்கும் இயந்திரம், 10 கொத்துக் கலப்பைகள், 11 திரும்பும் கலப்பைகள், 63 ரோட்டவேட்டர், 2 விதை விதைப்புக் கருவிகள் ஆகியவற்றை மானியத்தில் வாங்கிட ரூ.8.77 கோடியும், 6 வாடகை மையங்கள் அமைக்க ரூ.60 லட்சமும் மாவட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வேளாண் கருவிகள் வாங்குவதற்கு அவற்றின் மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச மானியத் தொகை இவற்றில் எது குறைவோ அதை மானியமாக சிறு, குறு, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் பெண் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
இதர விவசாயிகளுக்கு, அவற்றின் மொத்த விலையில் 40 சதவீதம் அல்லது அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச மானியத் தொகை வழங்கப்படும்.
இதில், நீடித்த நிலையான மானாவாரி இயக்கத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் உள்ள குழுக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
வேளாண் இயந்திரங்களை மானியத்தில் பெற்றிட, விவசாயிகள் உழவன் செயலியில் தங்களது ஆதார் எண்ணுடன் பதிவு செய்யவேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு, வேளாண்மைப் பொறியியல் துறை, உதவிச் செயற்பொறியாளர் அலுவலகம் (தொலைபேசி எண்- 04567-231783, 94433-23374) அல்லது பரமக்குடி, உதவிச் செயற்பொறியாளர் (தொலைபேசி எண்- 04564-224044, 94435-59058) அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.
விவசாயம் செய்வதற்கு ஒரு உந்துசக்தி